TamilsGuide

கனடாவில் விலைவாசி உயர்வால் இந்திய இளம்பெண் எடுத்துள்ள முடிவு

கனடாவில் கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர், விலைவாசி உயர்வால் அவதிப்படுவதுடன், பேசாமல் வேறொரு நாட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர் ஷ்ரமானா சர்க்கார் (24). நிலவியலில் முனைவர் பட்டம் பெறும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்தார் அவர்.
  
மாதம் 350 டொலர்கள் வாடகையில் அறை ஒன்றில் தங்கி இளங்கலை படிப்பைத் துவக்கினார் ஷ்ரமானா. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல, அறை வாடகையும் விலைவாசியும் உயர, பகுதி நேர பணி ஒன்றில் இணைந்தார் அவர்.

இன்று அவரது அறை வாடகை இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. மளிகைப் பொருட்கள் விலை 20 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. ஆனால், சம்பளம் உயரவில்லை. தான் படிக்கும் இடத்திலேயே ஒரு பகுதி நேர வேலை, இன்னும் இரண்டு காஃபி ஷாப்களில் வேலை என மூன்று இடங்களில் வேலை பார்த்தும், கிடைக்கும் வருவாய் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே சரியாக இருக்கிறது.

காலையில் எழுந்து படிக்கச் செல்லவேண்டும், அடுத்தது ஒரு பகுதி நேர வேலை, பிறகு வீடு, பிறகு பேருந்தில் ஏறி அடுத்தடுத்த இடங்களில் வேலை என முழு நேரமும் வருவாயைக் குறித்தே நினைத்துக்கொண்டிருப்பதால், படிப்பைக் குறித்து யோசிக்க கொஞ்சம் நேரமே கிடைக்கிறது ஷ்ரமானாவுக்கு.

இந்த நிலை ஷ்ரமானாவுக்கு மட்டுமல்ல என்கிறார் மனித்தோபா பல்கலை தொழிலாளர் வரலாற்றாளரான ஜூலியா (Julia Smith).

கனடாவில், நிலையற்ற அல்லது நிரந்தரமில்லாத பணி செய்யும் ஏராளமானோரின் நிலைமைக்கு ஷ்ரமானா ஒரு உதாரணம் என்கிறார் ஜூலியா.

எவ்வளவு மணி நேரத்துக்கு இன்னும் வேலை இருக்கும், அடுத்த மாதம் வேலை இருக்குமா, என எந்த உறுதியும் இல்லாமல், நான் படிக்கும்போதே கடினமாக உழைக்கப்போகிறேன், அதற்குப் பிறகு எனக்கு வேலை கிடைக்கும், ஆனால், வாழ்நாளெல்லாம் நான் கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும், எனக்காக சொந்தமாக ஒரு வீடு கட்டமுடியுமா? ஓய்வூதியமாவது கிடைக்குமா என முழு நேரமும் கவலையுடனேயே வாழும் ஒரு நிலை கனடாவில் ஏராளமானோருக்கு காணப்படுகிறது என்கிறார் ஜூலியா.

ஷ்ரமானாவைப் பொருத்தவரை, வாடகையும், பண வீக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்லுமானால், கனடாவை விட்டு விட்டு, தன்னால் சமாளிக்க முடிகிற ஒரு நாட்டுக்குச் சென்று படிப்பைத் தொடரவேண்டியதுதான் என்கிறார் அவர்.

இப்படி, கனடாவை நம்பி படிப்புக்காகவும், வேலைக்காகவும் வரும் வெளிநாட்டவர்கள் பலர், சட்டப்படி வருபவர்கள் கூட, வேறெங்காவது சென்றுவிடலாமா என எண்ணும் நிலை கனடாவில் அதிகரித்து வருவதற்கு ஷ்ரமானாவின் கதை மற்றொரு உதாரணம்! 
 

Leave a comment

Comment