TamilsGuide

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? - சஜித் கேள்வி

பொருளாதார குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்ட காரணத்தினால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதோடு, சபை நடவடிக்கையும் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நாட்டை வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளியவர்கள் யார் என்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தவறான தீர்மானங்களை எடுத்த இந்தத் தரப்பினர், இன்னமும் அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்து, ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் தவறான தீர்மானத்தினால், நாட்டு மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை மக்கள் அவதானத்துடன் பார்த்துக் கொண்டிக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், பீ.பி. ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினரால் இழைக்கப்பட்ட பாதிப்புக்கான நஷ்டஈட்டை குறித்த தரப்பிடமிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா?

அப்படியானால் எவ்வாறு அது மேற்கொள்ளப்படும்? இதற்கான கால எல்லையை அரசாங்கம் கூற வேண்டும்.

1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துக்கள் சட்டத்திற்கு இணங்க, இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment