TamilsGuide

இராஜதந்திர அனுமதி வழங்குவது தொடர்பாக வெளிநாட்டு தூதரகங்களுக்கு விசேட அறிவிப்பு

வெளிநாட்டு போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புகள் குறித்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன ஆய்வுக் கப்பல் நாட்டுக்கு வர விண்ணப்பித்தபோது இந்தியா, சீனா மற்றும் இலங்கை இடையே அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

நாட்டின் மேற்கு கடல் பகுதியில் ஆய்வு பணிக்காக வருவதாக சீன கப்பல் அறிவித்தாலும், இந்தியா தனது நாட்டை உளவு பார்ப்பதற்காக குறித்த கப்பல் வருவதாக கூறியது.

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, குறித்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கான நிலையான இயக்க நடைமுறையை மீளாய்வு செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு சபையில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, இது தொடர்பான அமைச்சரவை அங்கீகாரமும் அண்மையில் கிடைத்ததாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் அனைத்து நாடுகளுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment