TamilsGuide

பயங்கரவாதிகளை குறிவைத்து சிரியா மீது அமெரிக்கா வான்தாக்குதல்- 9 பேர் பலி

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதுபோன்று நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு அமெரிக்க எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பை விட உயர்ந்தது ஏதும் எல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 17-ந்தேதியில் இருந்து அமெரிக்க துருப்புகள் மீது குறைந்தது 40 முறையாவது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment