TamilsGuide

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் ஏஐ

ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை-தீமைகள் ஆகியவை குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல உலக நாடுகள் விவாதித்து வருகின்றன.

இது குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முயற்சிகளின் காரணமாக வளர்ச்சி அடைந்த நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஒரு சந்திப்பு, இங்கிலாந்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. சீனாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டு இந்த முயற்சிக்காக தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தது. 

இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் புதுவித சிக்கல் ஒன்றை ஏஐ ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அல்மென்ட்ராலெஹோ (Almendralejo) நகரில் சில நாட்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் 11லிருந்து 17 வயது வரை உள்ள 20க்கும் மேற்பட்ட சிறுமியர்களின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

மிரியம் அல் அடிப் (Miriam Al Adib) எனும் பெண்மணி தனது மகள் உட்பட பல சிறுமிகளின் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டு, ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் வெளி வந்துள்ளதாக புகாரளித்தார். பாதிப்புக்குள்ளான சிறுமிகளின் பெற்றோர்கள் இது குறித்த விழிப்புணர்வு குழு அமைத்து இதனை எதிர்த்து வருகின்றனர்.

"தங்கள் பெற்றோரிடம் இது குறித்து பேச தயங்கும் சிறுமிகள் தற்போது எங்கள் குழுவிடம் மனம் திறக்கிறர்கள் " என மிரியம் தெரிவித்தார். இவரை தொடர்ந்து பல தாய்மார்கள் இதே குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.

அங்குள்ள பள்ளிகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு ஏஐ-யினால் ஏற்பட கூடிய அபாயங்களை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இங்கிலாந்தில் நடந்த ஏஐ குறித்த சந்திப்பில், அந்நாட்டின் உள்துறை செயலர் சுவெல்லா ப்ரேவர்மேன், "குழந்தைகள் ஆபாச உள்ளடக்கங்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

"அனைத்து நாடுகளும் இது குறித்த நடவடிக்கையை உடனடியாக எடுத்தாக வேண்டும். எதிர்காலத்தில் இது போன்று செயற்கை நுண்ணறிவின் உதவியில் உருவாக்கப்படும் ஆபாச உள்ளடக்கங்கள், சமூக வலைதளங்களிலும், இணையத்திலும் சுனாமியை போல் பரவி விடும். இது இனிமேல்தான் ஆரம்பமாக போகும் ஆபத்து அல்ல; ஆரம்பமாகி விட்ட ஆபத்து" என இணைய உள்ளடக்க கண்காணிப்பு அமைப்பின் (Internet Watch Foundation) தலைவர் சூசி ஹார்க்ரீவ்ஸ் (Susie Hargreaves) தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு செயற்கை நுண்ணறிவின் மூலம் அச்சு அசலாக அவர்களை போலவே பிம்பங்களை உருவாக்கி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் செயலிகளை இணையத்திலிருந்து இலவசமாகவே பயனர்கள் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். இது குற்றவாளிகளை சுலபமாக செயல்பட உதவுகிறது.

சில தினங்களுக்கு முன் இந்தியாவில் புகழ் பெற்ற இரு நடிகைகளை, ஏஐ தொழில்நுட்ப உதவியால் ஆபாசமாக சித்தரித்த வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இவை ஏஐ தொழில்நுட்பத்தால் சுலபமாக உருவாக்கப்பட்டவை என்பது பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஒரு பெண், சிறுமி அல்லது சிறுவன் மீதான நேரடியான பாலியல் தாக்குதல்களில், அவர்களை குற்றவாளிகள் நேரில் சந்தித்துதான் தாக்குதலை அரங்கேற்ற வேண்டும். ஆனால், தற்போது கிளம்பியுள்ள புது சிக்கலில், இணையத்தில் தாங்களாகவே பெண்கள் அல்லது குழந்தைகள் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ குற்றவாளிகள் சுலபமாக உலகின் எந்த மூலையிலிருந்தும் பதிவிறக்கம் செய்து, ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட முடியும்.

இந்தியாவில் இது குறித்து விழிப்புணர்வோ, சட்டங்களோ இதுவரை இல்லை என்பதே உளவியல் வல்லுனர்களின் கவலையாக உள்ளது.
 

Leave a comment

Comment