TamilsGuide

தமிழர் பிரதேசங்களை சீனாவிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி போராட்டம்

வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் ஹொங் தலைமையிலான குழுவினர் இரண்டாம் நாளாக இன்று நயினாதீவுக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர்.

இதேவேளை வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினரால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் 2450வது நாளாக சுழற்சிமுறை போராட்டத்தினை முன்னெடுக்கப்படும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகைக்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.

இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாம் எமது தமிழர் தாயகத்தில் உள்ள காணிகளிலும் மீன்பிடி நீரிடத்திலும் சீனாவின் அத்துமீறலை வன்மையாக எதிர்க்கிறோம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
 

Leave a comment

Comment