TamilsGuide

சம்பந்தனை வெளியேற்றுவதில் உடன்பாடில்லை – கூட்டுத் தலைமை அவசியம் - சி.வி.விக்னேஸ்வரன்

சர்வதேசம் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக நினைப்பதால் அவரது இடத்தினை நிரப்புவதற்கு யாராலும் முடியாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பந்தனைப் புறக்கணிக்கவோ – நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே – அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும்.

வெளி உலகம் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக நினைக்கின்றது. சம்பந்தனை வெளியேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.

அவரைப் புறக்கணிக்கவோ – நீக்கவோ முனைவது தமிழ் மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். அவர் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம்.

அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.

அவரில் பல குறைகள் இருந்துள்ளன – இருக்கின்றன. ஆனால், யாரிடந்தான் குறைகள் இல்லை? அதுவும் தமிழர்கள் மத்தியில் ஒரு தமிழர் பற்றி இன்னொரு தமிழரிடம் கேட்டால் யாரும் நினைக்காத அளவிற்கு குறைகள் வெளிவரும்.

இதனால்தான் நான் அண்மையில் ஓர் ஊடகம் என்னிடம் கேள்வி கேட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவை என்றேன்.

மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன்.

தீர்மானங்கள் அவர்கள் மூவராலும் ஒருமித்து எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தேன்” என குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment