TamilsGuide

மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட குளங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு, பனிச்செங்கேனி மற்றும் கதிரவெளி பகுதிகளில் காணப்படும் குளங்கள், கொகோ-கோலா அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் வீ – எஃபெக்ட் நிறுவனத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காயங்கேனி, பனிச்செங்கேணி மற்றும் கதிரவெளி ஆகிய பகுதிகளில் காணப்படும் குளங்கள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

எங்கள் செயல்கள், எங்கள் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் கொகோ-கோலா அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

வீ- எஃபெக்ட் நிறுவனத்தின் ஊடாக அகம் நிறுவனத்தின் பங்களிப்பில், இந்தக் குளங்கள் 2 கோடியே 90 இலட்சம் ரூபாய் நிதியில் புணரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வாகரை கலாச்சார மண்டபத்தில் அதிதிகளின் வரவேற்பினை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி, வரவேற்பு நடனம் மற்றும் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

இதனைத்தொடர்ந்து புனரமைக்கப்பட்ட கதிரவெளி திக்கானை குளம் திரைநீக்கம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் Coca-Cola நிறுவனத்தின் பொது விவகாரங்கள் மற்றும் தொடர்பாடல் பிராந்திய தலைவரான லக்ஷான் மதுரசிங்க, வீ-எஃபெக்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் மயூரன் தேவசிங்கம், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment

Comment