TamilsGuide

இந்திய அரசின் பங்களிப்புடன் மலையகத்தில் 10,000 வீட்டுத் திட்டம்

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்  திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்பில் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியா சார்பில் கையொப்பமிட்டார். அத்தோடு, இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பதுளை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்திய அரசாங்கத்தினால் மலையகத்தில் ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகம் வந்திருந்தவேளை 10 ஆயிரம் வீடுகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது. முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு 28 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment