TamilsGuide

தங்கம், ஆயுதங்களைத் தேடி 3 ஆவது நாளாகத் தொடரும் அகழ்வுப் பணிகள்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார், இராணுவத்தினர், குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் குறித்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம், ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே கடந்த 25ஆம் திகதி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் இரண்டாம் நாளான நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது அகழப்பட்ட குழியிலிருந்து நீர் ஊற்றெடுத்த காரணத்தினால், அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு, நீர் இறைக்கும் மின் மோட்டார் இரண்டைப் பயன்படுத்தி குழியிலுள்ள நீரை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் குறித்த அகழ்வுச் செயற்பாடுகள் முன்றாவது நாளாக  இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறு இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment