TamilsGuide

மலையக  மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – பாரத் அருள்சாமி

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ”பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தற்போது உரிமைசார் விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனி வீடுகள், லயன் வீடுகள் என தோட்டப்பகுதிகளில் முகவரி இல்லாத அனைவருக்கும் முகவரி வழங்கப்படும். இதற்கான திட்டம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது இலக்கம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது, அப்பணி நிறைவுபெற்ற பின்னர் அனைத்து தரவுகளும் தோட்ட நிர்வாகம், கிராம அதிகாரி, அஞ்சல் மா அதிபர் ஆகிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும். கேகாலை மாவட்டத்தில் தற்போது பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இந்தியாவின் 10,000 வீட்டுத்  திட்ட பணிகளும் இடம்பெறும். 10 பேர்ச்சஸ் காணி ஒதுக்கீட்டுக்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. மலையக மக்களுக்காக இந்திய அரசால் அண்மையில் ஒதுக்கப்பட்ட விசேட நிதி கல்வி, சுகாதாரத்துறைகளுக்காக பயன்படுத்தப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment