TamilsGuide

நல்லூரில் ஏற்பட்ட சன நெரிசலால் பரபரப்பு

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட சன நெரிசலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம்  நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்றுள்ள நிலையில்  பக்தர்கள் வருகை தரவும் போவதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்ட நிலையில் சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக அகற்றப்படாத  நிலையில் சனநெரிசல் அதிகரித்து பலர் மூச்சுத்திணறலால் அவதியுற்றதுடன் அம்புலன்ஸ் வண்டி வருவதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பருத்தித்துறை வீதியை மறித்து நல்லூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினால் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்ட பாதையும் இதன்போது பக்தர்களால் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை சன நெரிசலை சாதகமாகப்  பயன்படுத்திய விஷமிகள் சிலர்  அங்கு  அங்கச் சேஸ்டையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது  திருடர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார் எனவும் அவரிடம் இருந்து பெருமளவான நகைகள் மீட்கப்பட்டுள்ள எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு உடனடியாக கோவில் அருகில் ஆலயத்தினரால் போடப்பட்ட வீதித்தடைகளை தளர்த்தி பக்தர்கள் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment