TamilsGuide

இளம் வயதுத் திருமணத்தை ஊக்குவிக்கும் சீனா

இளம் வயது திருமணத்தை சீன அரசு ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில்  குழந்தைகள் பிறப்பு விகிதம்  கடந்த சில வருடங்களாகக் குறைந்து வரும் நிலையில்  பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீன அரசு இறங்கியுள்ளது.

அந்தவகையில் ஒரு குடும்பத்திற்கு மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதே சமயம் மாகாண அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் தம்பதியர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தின் சாங்ஷான் என்னும் பகுதியில் அரசு நிர்வாகம் தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இளம் வயது திருமணங்கள் அதிகரித்தால் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையில் இப்புதிய திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மணமகளுக்கு 25 வயது அல்லது அதற்கு குறைவான வயது இருந்தால் அந்த தம்பதியருக்கு ஆயிரம் யுவான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதல்முறை திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மட்டுமே இச் சலுகை பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

கடுமையான விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் சுகாதார செலவுகள் மிகுதியாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைகளை வளர்த்தெடுக்க அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள சீனாவில் தம்பதியர் முன்வருவதில்லை எனக் கூறப்படுகின்றது.

அதே சமயம் நீண்ட பணி நேரம், குறைவான ஊதியம் போன்ற காரணங்களால் இளம் வயதினர் இல்லற வாழ்க்கையைக்  கண்டு அஞ்சிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment