TamilsGuide

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மூலோபாய வேலைத்திட்டம் - ஜனாதிபதி ரணில்

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழுவை நிறுவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

காலநிலை மற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் குழுவானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அனைத்து நடவடிக்கைகளின் போதும் நிதி முக்கிய காரணியாக காணப்படுவதாகவும், காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்த வகையில் வலுவான பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், காலநிலை மாற்றங்களை வெற்றிகொள்வதற்காக சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இணங்கிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையில் நிறுவப்படவிருக்கும் பல்கலைக்கழகத்தை சர்வதேச ஆய்வுக்கான கேந்திர நிலையமாக நடத்திச் செல்லும் அதேநேரம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தவது தொடர்பிலான இலங்கையின் அர்ப்பணிப்பை அதனூடாக அடையாளப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment