TamilsGuide

பொதுஜன பெரமுனவின் பலம் நாளுக்கு நாள் அதிகரிப்பு - சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த இவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களின் சூழ்ச்சியை மக்கள் புரிந்துக் கொண்டுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் குறிப்பிட்ட அவர்,

“ஒரு கட்சியில் தலைவர்கள் இருப்பது நல்லதொரு விடயம். ஆனால், அவர்கள் அனைதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இருப்பதுதான் விசேட அம்சமாகும்.

எமது கட்சி நாளுக்கு நாள் பலமடைந்து தான் வருகிறது. மக்கள், அன்று எம்மை நம்பினார்கள். இடையில் எமக்கெதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால், இன்று மக்கள் இந்தப் போராட்டங்களின் பின்னால் உள்ள சூழ்ச்சியை புரிந்துக் கொண்டுள்ளார்கள்.

இவற்றுக்கெல்லாம் யார் காரணம், இதற்கு எவ்வாறு நிதி வந்தது என்பது குறித்த தகவல்கள் இன்று வெளியே வந்துக் கொண்டிருக்கின்றன.

எனவே, மக்கள் இன்று இதனை புரிந்துக் கொண்டு, எமக்கான பலத்தை இன்னமும் அதிகரித்துள்ளார்கள்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் நாம் ஜனாதிபதியிடம் எதிர்ப்பார்க்கும் பிரதான விடயமாக உள்ளது.

எம்மால் இணங்க முடியாத விடயங்களை ஜனாதிபதி செய்ய முற்பட்டால், எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி அதற்கு எதிர்ப்பினை வெளியிட தயங்க மாட்டோம்.

ஜனாதிபதித் தேர்தல் அடுத்தாண்டு செப்டம்பரில் தான் நடைபெறவுள்ளது. நாமல் ராஜபக்ஷ திறமையான இளம் அரசியல்வாதி என்பதில் மாற்றமில்லை.

எனினும், தற்போதே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கருத்து வெளியிட முடியாது.

எவ்வாறாயினும், நாட்டுக்கு தேவையான வேட்பாளரை சரியான நேரத்தில் களமிறக்குவோம்” என அவர் தெரிவித்தார்.

Leave a comment

Comment