TamilsGuide

அபூர்வ ராகங்கள் - 15 ஆகஸ்ட் 1975

இந்தியாவின் 28 வது சுதந்திரத்தை நான் கொண்டாடிய தி.நகர் கிருஷ்ண வேணி தியேட்டரில் மாட்டினியில்.
ஏற்கெனவே அரங்கேற்றம் , அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களால் கே.பாலச்சந்தர் , புத்திசாலி இளைஞர்களின் லட்சிய படைப்பாளியாக திகழ்ந்தார்.
அபூர்வ ராகங்கள் ஒரு முழுமையான படைப்பு. புதுமையுடன்  நடிப்பு , கேமரா ( லோக்நாத்) , எடிட்டிங் ( கிட்டு ) , இசை ( பாடல்கள் - பின்னணி இரண்டிலும் எம்.எஸ்.வி) , திரைக்கதை , இயக்கம் எல்லாவற்றிலும் புதுமை , உன்னதம் தொட்ட வெகு சில தமிழ் படங்களில் ஒன்று.
சிலர் விக்ரமாதித்தன் புதிர் என்றும் சிலர் 42 காரட்  என்றும் படத்துக்கு இணையாக புதிர் போட , கதை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் , பாலச்சந்தரின் ஆழமான , வசீகரமான காட்சிகளால் விரியும் திரைக்கதை , படு புத்திசாலித்தனமான , வழமை ( cliche) தவிர்த்த குதூகலிக்க வைக்கும் எதிர்ப்பாரா வசனங்கள். இயக்கத்தில் ஒவ்வொரு அசைவிலும் யோசிக்க வைக்கும் எதிர்ப்பாரா கோணங்கள் , உருவக- உபமேயங்கள் , சிறு சிறு நுணுக்கங்கள் என்று அசைய விட மாட்டார்.
இத்தனையும் மீறி ஒரு சுவாரஸ்யம். ஒரு காட்சியில் கூட அலுப்பே வராது. எதிர்ப்பாரா தன்மை நம்மை சுற்றி புதிராக சூழும்.
ஒரு பாடலுடன் துவங்கி , புதிர்களை துவங்கி , முடிச்சுகள் இறுகி , ஒரு பாடலுடன் முடிச்சுகள் அவிழும் படத்தில் , எழுந்த போது  ஒரு பிரமையுடன் , ஏதோ ஒரு தீவில் தனித்திருந்து மீண்ட பிரமிப்பில் வெளியேறினேன்.
படம் முழுவதும் இசையின் கூறுகள் கதையுடன் இணைந்தே பயணிக்கும். விஸ்வநாதனின் கர்நாடிக் இசைக்கருவிகளை உபயோகித்தே ஒலிக்கும் பின்னணி இசை காட்சிகளின் மாண்பை மதிப்பை வெகுவாக கூட்டும்.

பாலச்சந்தர் படத்தின் அழகு நீளமான காட்சிகளை தவிர்த்து , காட்சிகளின் எண்ணிக்கையை கூட்டி ,சலிப்பின்றி செய்வார்.
அவர் படங்களை சுற்றி  சர்ச்சைகள் வரும். முட்டாள்கள் அந்த திசையில் திரும்பவே மாட்டார்கள்.  ரசனை மிகுந்த புதுமை விரும்பிகளுக்கும் , வறட்சியான குதர்க்கவாதிகளுக்கும் நடக்கும் உரையாடல் மோதல் சில நேரம் சுவாரஸ்யம் தரும்.
திரைக்கதை கொடுப்பதில் கூட பூத்தொடுக்கும் லாவகத்தோடு மணமுள்ள நிறைய விதமான பூக்களை கதம்ப மயமாக தொடுத்து மணத்தோடு  கூடிய வர்ண ஜாலமாக படம் ஜொலிக்கும்.
நாகேஷின் நகைச்சுவை கூட படத்தில் அவ்வளவு ரசிக்க வைக்கும்.
கமல்ஹாசனுக்கு முதற்காதலியும் , ரஜினிக்கு முதற்படமும் கிடைத்தது சரித்திரம்.
இன்றும் பார்க்கும் போதும் என்றுமே பார்க்கும் போதும் பிரமிப்பை தரும் படமாக என்றும் இருக்கும்.
இன்னொரு சிவாஜியோ , பாலச்சந்தரோ என்றுமே தோன்ற வாய்ப்பில்லை.

Gopalakrishnan Sundararaman
 

Leave a comment

Comment