TamilsGuide

இப்படியே போனால் பாலிவுட் சினிமாவிற்கு ரசிகர்கள் இருக்கமாட்டார்கள்- ஈரானிய இயக்குனர் பேச்சு

பிரபல ஈரானிய இயக்குனரான மஜித் மஜிதி 'சில்ரன் ஆஃப் ஹெவன்', 'தி கலர் ஆஃப் பாரடைஸ்' உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மஜித் மஜிதி பாலிவுட் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில், திரைப்பட உருவாக்கத்துக்கான சிறந்த திறமையும் மகத்தான ஆற்றலும் இருப்பதாக நம்புகிறேன். மக்கள் தொகையை அதிகம் கொண்ட வளமான நாடு என்பதால் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள் அதிகம் உள்ளது.

ஆனால் பாலிவுட் அந்தத் திறனை சரியாகப் பயன்படுத்துவதில்லை. பாலிவுட் சினிமா தன்னை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அது ஒரு பிரச்சனையாக இருக்கும். இப்போது எடுப்பது போன்ற படங்களையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தால் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில், இப்போது இருக்கும் ரசிகர்கள் கூட இருக்கமாட்டார்கள் என்று பயப்படுகிறேன். பாலிவுட் இன்றைய காலகட்ட பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் கதைகள் மற்றும் படங்களை உருவாக்க வேண்டும். நான் பாலிவுட்டுக்கு எதிரானவன் இல்லை. அவர்கள் எடுக்கும் கதையில் சிறிய மாற்றம் வேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். இளம் தலைமுறையினர் திறமையுடன் இருப்பதாக நம்புகிறேன் என்று பேசினார்.
 

Leave a comment

Comment