TamilsGuide

அமெரிக்காவில் தன் உயிரை தியாகம் செய்து 3 குழந்தைகளை மீட்ட தந்தை

அமெரிக்காவில் ஆற்றில் தத்தளித்த தன்னுடைய 3 குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு ஏற்றிவிட்ட தந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதன்கிழமை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மில்ஸ்டோன் ஆற்று நீரில் தத்தளித்த தன்னுடைய 3 குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என உள்ளூர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

42 வயதான ரோலண்டோ கமரில்லோ-சோலுலா(Rolando Camarillo-Cholula) ஆற்றில் தத்தளித்த தன்னுடைய 11, 13 மற்றும் 18 வயதுடைய மூன்று குழந்தைகளை ஆழமற்ற கரைப்பகுதிக்கு இழுத்து கொண்டு வந்துவிட்ட பிறகு கட்டுப்பாட்டை இழந்து நீரில் மூழ்கினார்.

இது தொடர்பாக நபர் ஒருவர் மதியம் 2:15 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கரையில் இருந்த மூன்று குழந்தைகளையும் மீட்டனர்.

மருத்துவ குழு குழந்தைகளுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

நீரில் மூழ்கிய குழந்தையின் தந்தை ரோலண்டோ கமரில்லோ-சோலுலா-வை சுமார் 3 மணி நேரங்களுக்கு பிறகு (மாலை 5.30) நீர்மூழ்கி நபர்கள் ஆற்றில் இருந்து மீட்டனர்.

அத்துடன் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக தீவிரமான விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் மில்ஸ்டோன் ஆற்றில் நீந்துவதற்கு எத்தகைய தடையும் செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி வின்செண்ட் வில்சன் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment