TamilsGuide

இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் ரோம், வெனிஸ் போன்ற நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களும் சோகத்தில் உள்ளனர். இதற்கிடையே இத்தாலியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும் மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி கூறும்போது, விமான நிலைய பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றார்.

Leave a comment

Comment