TamilsGuide

சிவாஜி நடித்த பழைய கர்ணன் திரைப்படத்தில் உண்மையான மகாபாரதம் எப்படி பொய்யாக திரிக்கப்பட்டது –ஒரு பார்வை..

ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் அப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது..
ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடும் வாய்ப்பே அதிகம்...
இத்திரைப்படத்தில் ஜோடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் மிகவும் கண்டிக்கத்தக்க காட்சி: 

இறுதியில் கிருஷ்ணர் கர்ணனிடம் வந்து தர்மத்தை பிச்சை கேட்கும் காட்சி. எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை என்பதால், பெரும்பாலான தமிழக மக்கள், கிருஷ்ணர் கர்ணனிடம் பிராமண ரூபத்தில் வந்து அவன் செய்த தானத்தின் பலன்களை தானமாகப் பெற்றார் என்று இன்றும் நம்பிக் கொண்டுள்ளனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை, இது  ஏமாற்றுத்தனத்தின் உச்சகட்டம். 
கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்குக் காட்டியதாகக் கூறுவதும் பொய், “வஞ்சகன் கண்ணனடா” என்பதும்  துளியும் ஏற்கத்தக்கதல்ல. கதாநாயகர்களுக்காக வடிவமைக்கப்படும் இத்தகைய காட்சிகள் பெரும் கண்டனங்களுக்கு உரியவை. அந்தோ பரிதாபம்! கண்டிக்கத்தான் ஆள் இல்லை!
இதர சில குளறுபடிகள்.
திரைப்படத்தின் குளறுபடிகள் சொல்லி மாளாதவை, அவை எமது நோக்கமும் அல்ல. இருப்பினும், முக்கிய குளறுபடிகளை சுட்டிக் காட்டுவதை கடமையாக உணர்கிறோம்.
* கர்ணன் செய்த அனைத்து அட்டூழியங்களும் மறைக்கப் பட்டுள்ளன.
* கர்ணன் அர்ஜுனனால் தோற்கடிக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றையும் காணோம்.
* குந்தி போர்க்களத்திற்கு ஓடிவந்து, மகனே என்று அழுவதெல்லாம் சுத்த பொய். மஹாபாரதத்தின்படி போர் முடிந்த பின்னர், இறந்த உறவினர்களுக்கு யுதிஷ்டிரர் ஈமச் சடங்குகளைச் செய்யும்போது மட்டுமே குந்தி அதனை வெளிப்படுத்துவாள். போர்க்களத்திற்கு வந்து அழுவதாகவும், அதற்காக கர்ணன் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்ததுபோலவும் காட்டியிருப்பது வேதனைக்குரியதாகும்.
* கர்ணனின் மகன் விருஷஷேணன், அவனது கண்களுக்கு முன்பாக முறையான போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். அவன் ஒரு சிறுவனும் அல்ல, பின்னால் இருந்து தாக்கப்பட்டவனும் அல்ல. விருஷஷேணனை சிறுவனாகக் காட்டியதும் பின்னால் இருந்து கொல்லப்பட்டதாகக் காட்டியதும் வெற்று அனுதாபங்களை கர்ணனுக்கு சேகரிப்பதற்காகவே.
* சல்லியன் தேரிலிருந்து ஓடியவனா? இல்லை. சல்லியன் பெரும் முயற்சி செய்தும் தேரை உயர்த்த முடியாததால், கர்ணனே இறங்க வேண்டியிருந்தது என்பதே உண்மை.
* நாக அஸ்திரத்தை இரண்டாம் முறை பிரயோகிக்க கர்ணன் மறுத்ததற்கு, “நான் எனது வெற்றிக்கு நாகங்களைச் சார்ந்தவன் அல்ல,” என்ற கர்ணனின் அகந்தையே காரணம். குந்தி அவ்வாறு வரம் கேட்டதாக வருவது கற்பனை.
* கர்ணன் பரசுராமரிடம் பொய் சொல்லி கலை கற்றது துரியோதனனின் தூண்டுதலினால் அல்ல. துரியோதனனைச் சந்திப்பதற்கு முன்பாகவே கர்ணன் பரசுராமரிடம் கலை கற்றிருந்தான்.
* மனைவியைப் பணயம் வைத்ததை கர்ணன் திட்டுவது போன்ற காட்சிகள் உண்மையை திருப்பிப் போடுகின்றன. திரௌபதியை அவமானப்படுத்தியதில் கர்ணன் மிக முக்கிய பங்கு வகித்தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
* அதர்மத்தின் பக்கம் நின்ற கர்ணனைக் காண தர்ம தேவதை வருவதுபோன்ற காட்சிகள் எதற்காக?
* கர்ணனின் திருமண வாழ்க்கை குறித்த தகவல்கள் கற்பனைகளால் மூழ்கியுள்ளன. 
*கர்ணனும் துரியோதனனின் மனைவியும் சொக்காட்டான் ஆடுவது போலவும், துரியோதனன் வந்ததும் அவனது மனைவி எழும்ப முயல, கர்ணன் அவளது சேலையை  பிடித்து அமர வைப்பது போன்ற காட்சியும் மகாபாரதத்தில் இல்லை என்று சோ அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
*பிறப்பறியாத ஒரு அநாதை சிறுவனை படிக்க விடவில்லை அதனால் பாடசாலைக்கு அவன் தீ வைத்தது சரி என்று கர்ணன் அவனை "என் இனமடா நீ" என்று ஆதரிப்பது போல காட்சி வரும். வர்ணாச்சிரம தர்மம் தாழ்த்தப்பட்டவர்களை படிக்க விடாது என்று குறிகாட்டுவதற்கு வேண்டுமென்றே விஷமத்தனமாக வைக்கப்பட்ட காட்சிகள். 
*கர்ணன் பிறவி வள்ளலும் அல்ல...வனவாசம் சென்ற பாண்டவர்களை வெறுப்பேற்ற காட்டுக்குச்சென்றபோது கந்தர்வர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தோல்வியுற்று மரத்தில் கட்டிப்போடப்படுகிறார்கள்...பின்னர் யுதிஷ்டிரர் அறிவுரையின் பேரில் பீமனும் அர்ஜுனனும் வந்து கந்தர்வர்களுடன் போர் செய்து துரியோதனாதிகளையும் கர்ணனனையும் மீட்கிறார்கள்...அந்த அவமானம் தாங்காமல் இனி தன் வாழ்நாளில் மது அருந்தமாட்டேன் - யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பேன் என்று சபதம் செய்கிறான்... அவ்வளவே...
மொத்தத்தில் சினிமா பார்த்து மஹாபாரதம் கற்க வேண்டாம் என்பதை இதன் மூலமாக பகவத் தரிசன வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறோம்...

நன்றி ஶ்ரீ கிரிதாரி தாஸ்

Leave a comment

Comment