TamilsGuide

மக்களின் கல்விக்காக அக்கறையோடு செயல்பட்டு வரும் சூர்யாவிற்கு பாராட்டு- மு.க.ஸ்டாலின்

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் "சத்தியதேவ்" அவர்களின் நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் "சத்தியதேவ் லா அகாடமி"-யை (Sathyadev Law Academy) முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த அகாடமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், "சத்தியதேவ் லா அகாடமி"யை உருவாக்கிய சூர்யா மற்றும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்களை இயக்குனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியதேவ் லா அகாடமியைத் தொடங்கி வைத்தேன். இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.

சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணிபுரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment