TamilsGuide

நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசாங்கத்தை பலப்படுத்துவதாக அமையக்கூடாது - உதய கம்மன்பில

எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுகாதாரதுறை மீது மட்டுமன்றி, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இன்று இல்லாது போயுள்ளது.

அரசாங்கத்திற்குள் இன்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், எதிர்க்கட்சியோ நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து, அரசாங்கத்தை மீண்டும் ஒற்றுமைப்படுத்தி, பலப்படுத்திவிடக் கூடாது.

நாடாளுமன்றில் இறுதியாக இடம்பெற்ற இரண்டு வாக்கெடுப்பிலும் அரசாங்கம்தான் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சியில் பலர் இந்த வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறான பின்னணியில், சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தால், அது அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையில்தான் அமையும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment