TamilsGuide

பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதிய வரலாறு படைத்த 7 வயது சிறுமியின் தாய் 

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 75ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டி, போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவான் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதியில், போட்டியை நடத்திய நாடான போர்ட்டோ ரிகோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ 2026ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாகத் தெரிவு செய்யப்பட்டு மகுடம் சூடினார்.

திருமணமானவரும், 7 வயதில் பெண் குழந்தையொன்றின் தாயுமான ஜெனிபர் பாரெட்டோ, இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

திருமணமான மற்றும் குழந்தைக்குத் தாயான ஒருவர் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரபஞ்ச அழகிப் போட்டியில் 18 முதல் 28 வயதுக்குட்பட்ட, திருமணமாகாத மற்றும் குழந்தைகள் இல்லாத பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது.

எனினும், 2023ஆம் ஆண்டு முதல் இவ்விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, திருமணமான பெண்கள், விவாகரத்தானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த மாற்றத்தின் மூலம் போட்டியில் பங்கேற்ற ஜெனிபர் பாரெட்டோ, தற்போது பட்டத்தை வென்று, குழந்தைக்குத் தாயான முதல் பிரபஞ்ச அழகி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, பிரபஞ்ச அழகிப் போட்டிக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் நோக்கில், பிடித்த உணவுகளை முற்றாகத் தவிர்க்காமல், முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி ஓராண்டில் 31 கிலோகிராம் உடல் எடையைக் குறைத்ததாக ஜெனிபர் பாரெட்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த 19 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவி காசியா லிஸ் மெஜோ, முதல் 30 போட்டியாளர்களுக்குள் இடம்பிடித்தார்.

எனினும், அடுத்த சுற்றான முதல் 12 இடங்களுக்குள் முன்னேறுவதற்கான வாய்ப்பை அவர் இழந்ததுடன், போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
 

Leave a comment

Comment