TamilsGuide

லூயிஸ் ஏரியில் பனிப்படலம் உடைந்து விழுந்ததில் 70 வயது முதியவர் உயிரிழப்பு

கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள பான்ஃப் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், செவ்வாய்க்கிழமை மாலை லூயிஸ் ஏரியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பனிப்படலம் உடைந்து நீருக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கனேடிய ரோயல் மவுண்டட் காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பனிப்படலம் மிகவும் மெல்லியதாகக் காணப்பட்ட ஏரியின் பின்பகுதியில் அவர் தனியாகப் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாலை 6:15 மணியளவில் அவர் பனிக்குள் விழுந்த நிலையில், தேடுதல் பணிகளின் பின்னர் இரவு 8:10 மணியளவில் நீருக்கு அடியிலிருந்து மீட்கப்பட்டார்.

மீட்புக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து பான்ஃப் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

"இங்குள்ள பனிப்படலம் மிகவும் புதியது மற்றும் மிகவும் மெல்லியது. எனவே, பருவகாலத்தின் இந்த ஆரம்ப கட்டத்தில் நீர்நிலைகளில் பனிச்சறுக்கு செய்வது மிகவும் ஆபத்தானது," என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக லூயிஸ் ஏரியில் பலர் பனிப்படலம் உடைந்து நீருக்குள் விழுந்துள்ளனர்.

திங்கட்கிழமை இரண்டு பேரும், ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் இவ்வாறு விழுந்தபோதிலும், அவர்கள் தாமாகவே நீந்தி உயிர்தப்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏரியின் ஆபத்தான சில பகுதிகள் அடையாளமிடப்பட்டு, அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதிலும், புதன்கிழமையும் பலர் ஏரியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டதைக் காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, கனேடிய பூங்காக்கள் திணைக்களம் தனது பான்ஃப் தேசிய பூங்கா முகநூல் பக்கத்தில் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

லூயிஸ் ஏரி அல்லது ஏனைய இயற்கை நீர்நிலைகளின் பனிப்படல நிலையைத் திணைக்களம் கண்காணிப்பதில்லை. இயற்கையான பனிப்படலத்தில் பனிச்சறுக்கு செய்பவர்கள் தங்களின் சொந்தப் பொறுப்பிலேயே அதனை மேற்கொள்ள வேண்டும்; ஆபத்து ஏற்பட்டால் தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment