மறக்க கூடிய நடிகனா ராதா? அவர் நாடகம் என்ன? அவரின் படத்து வசனங்கள் என்ன?
சினிமா
மூடநம்பிக்கை, அரசியல், கருப்பு பணம், வரி ஏய்ப்பு, போலி சாமியார், போலி தமிழர், போலி கம்யூனிஸ்ட் என எல்லாவற்றையும் அன்றே சாடி சென்ற அறிவாளி அவன். அதனால்தான் இன்றளவும் அவன் வசனங்கள் நிற்கின்றன.
அண்ணா சினிமா கலைஞர்களை முன்னிறுத்தியது பெரியார், சம்பத், என பெருந்தலைகள் யாருக்கும் பிடிக்கவில்லை, நடிகர்கள் என்பது அவ்வளவு கீழான பார்வையாக இருந்தது, கூத்தாடிகளை வைத்தால் எல்லாம் நாசமாகும் என எச்சரித்தார்கள்.
இன்று அது நடந்தும் விட்டது
பல சிந்தனையாளர்கள் கண்டித்தார்கள், ஆனால் சினிமா உலகில் இருந்து அதனை கண்டித்த ஒரே குரல் ராதாவுடையது, மற்ற எல்லோரும் சினிமா எதிர்காலம் கண்டு அஞ்சினர். ராதா சினிமாவினை மதித்தவரே அல்ல, அவரின் மூச்சு நாடகம், “அதுவும் இல்லாவிட்டால் சாவேன் போடா..” எனும் தைரியமும் இருந்தது
அந்த தைரியத்தில்தான் “டேய் ராமசந்திரா உனக்கு எதுக்கு அரசியல், நாம கூத்தாடி கூத்துமட்டும்தான் செய்யணும், அரசியல் வேற லெவல் அதுல கூத்தடிச்சா நாடு நாசமாயிரும்” என அவரால் ராமசந்திரனிடமே சொல்ல முடிந்தது
“சினிமாகாரர்களை கூட்டி திரியும் அண்ணா பின்னால் செல்லமாட்டேன் ,அதன் அழிவு பின்னால் தெரியும் அந்த பாவத்தில் நான் பங்குபெறமாட்டேன்” என மிக பகிரங்கமாக சொன்னவர் ராதா
அக்கால திரையுலகமே அண்ணாவின் பார்வைக்காய் ஏங்கி நிற்க, அந்த அண்ணாவினை அசால்ட்டாக கடந்து சென்றவர் ராதா
ராமசந்திரன் திமுகவின் முக்கிய முகமாக உருவான பொழுது , சினிமா நாயகர்கள் அரசியலுக்கு வர முயன்றபொழுதே பகிரங்கமாக சாடியவர் ராதா
“டேய்.கூத்தாடி பய உலகம் அறிவில்லாதது , எல்லாம் நடிப்பு, பழகி பார்த்ததுல சொல்றேன் பூரா முட்டாப்பயலுக, சுயநலம் பிடிச்சவனுக, அறிவு சுத்தமா கிடையாது.
நீ ஏன் அதுல போய் மேதைகளும், சிந்தனையாளர்களும், வழிகாட்டிகளும் இருக்கின்றார்கள் என தேடலாம்?
நல்லவர்கள், பொதுநலவாதிகள், கற்றவர்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றார்கள், அங்கே போய் தேடு
அவங்க எல்லாம் இந்தமாதிரி இடத்துக்கு வரமாட்டங்க, கவுரவமானவர்கள், சுய அறிவு உள்ளவர்கள், கண்ணியவான்கள். அவங்க இருக்கிற இடம் வேற அங்க போய் தேடு
இந்த கூத்தாடி உலகத்தில..அதுவும் நாங்கல்லாம் நாடகம் போட்ட காலத்துல சீ சீ வேணாம் , பொது இடத்தில பேசினா நல்லாருக்காது
நல்லவங்கள, சிந்தனையாளர்கள அங்க தேடாத, அங்க எல்லாம் பஞ்சமா அயோக்கிய பயலுக, அவனுக உலகம் வேற
பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு, அவன் அடுதத கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான், அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காத, அது பெரும் அசிங்கம், அவன் விதி அப்படி, அவன அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாத
நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன் அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாத அசிங்கம் அவமானம்”
“எனக்கு எம்ஜிஆர்னு எவனையும் தெரியாது, ராமசந்திரன்னு என்னோட நடிச்ச ஒரு சின்ன பயலை மட்டும் தெரியும்” என பத்திரிகையில் சொன்ன ராதா
“என்னடா புரட்சி தலைவன், நான் செய்யபோறேன் பார் அது புரட்சி” என எச்சரித்த அந்த ராதா
திரையுலகில் ராமசந்திரன் கொடுமை எல்லை மீறிய பொழுது, அவரிடம் பேசசென்று துப்பாக்கி சண்டையில் முடித்த அந்த ராதா
“என்னாச்சி..” என எல்லோரும் ஓடிவந்தபொழுது “சுட்டாச்சி” என அசால்ட்டாக சொன்ன அந்த ராதா
நீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதாடும்பொழுது, “அங்க இருந்தது நாங்க 2 பேரு ஆனா பார்த்தமாதிரி இங்க கத்துறது இவனுக” என கலாய்த்த அந்த ராதா
தீர்ப்பு வந்ததும் “வக்கீல் பொய் சொல்றது எல்லோரும் ஒத்துக்குவாங்களாம், ஆனால் அதே வக்கீல் நீதிபதி ஆனா மட்டும் உண்மைய பேசுறத நாம நம்பணுமாம்” என முணுமுணுத்த அந்த ராதா ஒரு நாளும் மறக்க முடியாதவர்
“கூத்தாடி பயலுகளுக்கு மன்றம் வைக்காத, அவன தலைவன் ஆக்காத. அந்த கூத்தாடிக்கு காசு கொடுத்து நடிக்கவைக்கிற
கொடுக்குற காசுக்கு நடிப்பை கேளு, நாட்டை கொடுக்க நினைக்காத அது அழிவு ஆபத்து, அவன் நொடிக்கொரு வேஷம் போடுற பய அவன்கிட்ட ஏது சுய அறிவு, சிந்தனை சமூக நோக்கம், வெட்கம், அவமானம் எல்லாம்?” என அவர் முழங்கியது மறக்க முடியாது
சினிமாதுறையில் இருந்துகொண்டே சினிமாகாரர்களின் அயோக்கியத்னத்தை தோலுரித்த தைரியம் ராதாவினை தவிர இன்னொருவருக்கு வரபோவதே இல்லை
ஆம் ராதாவிடம் சுயநலமில்லை பொதுநலமிருந்தது, பொய் இல்லை உண்மை இருந்தது
அந்த பொதுநலமும் உண்மையும் அவருக்கு மகா தைரியத்தை கொடுத்திருந்தது.
Sukumar Shan






















