TamilsGuide

கொழும்பு பேச்சுவார்த்தை ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கான முயற்சியாக அமையக்கூடாது! போராட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரை மற்றும் அதனை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக நேற்று (24.11.2026) மாலை வரை இடம்பெற்றது.

காணி உரிமையாளர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் குறித்த போராட்டத்தில் பங்கேற்று காணிகளை உடன் விடுவிக்குமாறு கோரி கோஷங்களையும் எழுப்பினர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைப் பரப்பு செயலாளரான நடராஜர் காண்டீபன் கருத்து தெரிவிக்கையில், தையிட்டி காணி உரிமையாளர்களிடம் உறுதி ஆவணங்கள் அனைத்தும் உள்ள போதிலும், விகாரை தரப்பினரிடம் சட்டரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், டிசம்பர் முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தைக் கடத்தி காணி ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கான முயற்சியாக அமைந்துவிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் அனுமதியற்ற கட்டுமானங்களை இப்போது வரை தொடர்வது தொடர்பிலும், பவாணி வீதியை திறப்பதில் தொடரும் தடைகள் மற்றும் சட்டவிரோத விகாரைக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரான கனகரத்தினம் சுகாஸ் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் ஹட்டன், தெஹிவளை போன்ற பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் அரசாங்கம், இராணுவப் பிரசன்னத்துடன் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற ஏன் தயங்குகிறது?

சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றுவதற்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும், இதற்காக ஜனாதிபதி அல்லது பிரதமரின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர் சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றத் தவிசாளர் முன்வந்தால், கட்சி பேதங்களைக் கடந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த்தேசியப் பற்றாளர்களும், காணி உரிமையாளர்களும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என உறுதியளித்தார்.
 
 

Leave a comment

Comment