TamilsGuide

மகளிர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான கிண்ணத்தை கைப்பற்றி இலங்கை அணி அபார வெற்றி

 'ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான கிண்ண' (ICC Women's Emerging Nations Trophy) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் நகரில் அஜ்மான் கார்வான் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (25) நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அயர்லாந்து அணி சார்பில் அலானா டால்செல் அதிகபட்சமாக 25 ஓட்டங்களையும், லூயிஸ் லிட்டில் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இதன்போது பந்துவீச்சில் இலங்கை அணியின் சத்யா சந்தீபனி 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டி கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டது.

Leave a comment

Comment