உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட, தமிழக அரசியல்வாதி தொல் திருமாவளவன் எந்த வகையான விசாவில் இலங்கைக்கு வருகைத் தந்தார் என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றையதினம்(24.11.2026) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடர்ந்தும் அவர் இங்கு தெரிவிக்கையில்,
வெளிவிவகார அமைச்சர், விஜித ஹேரத்தை அரசியல் களத்தில் அதிகமாக காண முடிவதில்லை. அவர் இன்னமும் அரசியல் ரீதியாகத் தூக்கத்தில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய உறவினரான சிவாஜிலிங்கம் அண்மையில் உயிரிழந்தார். நான் ஆளுநராகப் பணியாற்றிய காலத்தில் அவரைச் சந்தித்திருக்கின்றேன்.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய அரசியவல்வாதியான தொல் திருமாவளவன் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார். ஒருவரின் மரணத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது மனிதாபிமான அடிப்படையிலான விடயம்தான். அதில் தவறில்லை.
ஆனால், அவர் எந்த வகையான விசாவில் இலங்கைக்கு வருகைத் தந்தார்? இராஜதந்திர விசாவிலா அல்லது சுற்றுலா விசாவிலா? சுற்றுலா விசாவில் வந்திருந்தால், அந்த விசாவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. தொழில் செய்ய முடியாது. அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், அவர் என்ன செய்தார்? விடுதலைப்புலிகளின் தலைவரது இல்லத்திற்குச் சென்று வணக்கம் செலத்தினார். இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதைத்தானா நாம் அனுமதிக்க வேண்டும்.
கருத்தியல் ரீதியாக இன்னமும் பல்வேறு இடங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கம் பிரிவனைவாதக் குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதுதான் நாம் செய்ய வேண்டிய செயலா? எனவே அமைச்சர் விஜித ஹேரத், நீங்கள் இன்னமும் தூக்கத்திலா இருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.


