TamilsGuide

துரந்தர் 2 உட்பட 32 படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்காருக்கு செல்லும் இளையராஜா இசையமைத்த மராத்தி படம்

சந்தோஷ் தாகர் இயக்கிய மராத்தி திரைப்படமான 'கோந்தல்', 2027 ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு அனுப்ப அதிகாரப்பூர்வப் படமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பட்டியலில் மொத்தம் 33 படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்திய திரைப்படக் கூட்டமைப்பு (IFFI) கடந்த செப்டம்பர் 18 இந்த பட்டியலை வெளியிட்டது.

இந்நிலையில் ஏனைய 32 படங்களை பின்னுக்கு தள்ளி 'கோந்தல்' இந்தியாவின் அதிகாரபூர்வ ஆஸ்கர் பரிந்துரைக்கான படமாக தேர்வாகியுள்ளது.

'கோந்தல்' தோற்கடித்த 32 படங்களில் 'துரந்தர் 2', 'பார்டர் 2', '120 பகதூர்', 'பெத்தி' உள்ளிட்ட படங்கள் அடங்கும்.

இந்திய கலாச்சாரம், கிராமப்புற அழகு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கருத்தில் கொண்டு 'கோந்தல்' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்வுக் குழுத் தலைவர் பி. சேஷாத்ரி தெரிவித்தார்.

தற்போது 'கோந்ல்' உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 104 திரைப்படங்கள், 2027 ஆஸ்கர் விருதுகளின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

மகாராஷ்டிராவின் கிராமப்புறத்தில் நடைபெறும் பாரம்பரிய 'கோந்தல்' திருவிழாவின் பின்னணியில், சுமன் என்ற பெண்ணைச் சுற்றி இப்படம் சுழல்கிறது.

திருமண வாழ்வில் அடக்குமுறைக்கு ஆளான அவள், தன் காதலன் மற்றும் கணவனின் உறவினர் தொடர்புடைய ஒரு கொலைச் சதியில் சிக்கிக்கொள்கிறாள்.

ஒரு விறுவிறுப்பான 'உளவியல் திரில்லர்' ஆக இது உருவாகி உள்ளது.

'கோந்தல்' திரைப்படம், 2025ல் கோவாவில் நடைபெற்ற 56வது சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் உலக அளவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது.

இந்தப் படத்திற்காக சந்தோஷ் தாகர் சிறந்த இயக்குனருக்கான ரஜத் மயூரா விருதை வென்றார்.

இளையராஜா இப்படத்திற்கு இசைமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment