TamilsGuide

பிரித்தானிய மக்களுக்கு பிரதமர் கூறும் நல்ல செய்தி

Andy Burnham vows Brexit deal will bring down the cost of weekly shop: புதிய பிரெக்சிட் ஒப்பந்தத்தால் மளிகைப்பொருட்கள் விலை குறையும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா செய்துகொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தால், மளிகைப்பொருட்கள் விலை குறையும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம். 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து, அதாவது, பிரெக்சிட்டைத் தொடர்ந்து, பிரித்தானிய பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும், இறக்குமதி செய்வதிலும் பெரும் பிரச்சினைகள் உருவாகின. 

எல்லைகளில் ஆவணங்களை நிரப்புதல் போன்ற விடயங்களுக்காக அதிக நேரம் காத்திருத்தல் முதல், பல பிரச்சினைகளை பிரித்தானிய வர்த்தகர்கள் எதிர்கொண்டார்கள்.

இந்நிலையில், உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, வர்த்தகம் தொடர்பில், கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளார் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம். 

பிரித்தானிய பிரதமர் கூறும் நல்ல செய்தி

கடந்த வாரம் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில், sanitary and phytosanitary (SPS) agreement என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. 

அந்த ஒப்பந்தத்தால், இனி எல்லைகளில் உணவு மற்றும் வேளாண் பொருட்கள் மீதான சோதனைகள், கட்டுப்பாடுகள் நீக்கப்படும், ஆவணங்கள் நிரப்பும் வேலை குறையும்.

இந்நிலையில், தான் சமீபத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றிற்குச் சென்றபோது, அங்கிருந்து, பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசமான ஜிப்ராட்டருக்கு அவர்கள் அனுப்பும் பொருட்கள் தொடர்பில் நிரப்பவேண்டிய ஆவணங்களை அங்காடி ஊழியர்கள் தனக்குக் காண்பித்ததாக தெரிவிக்கிறார் ஆன்டி பர்னாம்.

அதாவது, இவ்வளவு ஆவண வேலைகளை முடித்து, எல்லைகளைக் கடந்து, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அந்த பொருட்கள் அவ்வளவு தூரம் சென்றடையும் நிலையில், அந்த பொருட்களை ஜிப்ரால்டர் கொண்டு சேர்ப்பதற்கான செலவு அதிகரித்திருக்கும்.

கடைசியில் அந்த செலவு நுகர்வோர் தலையில்தான் சென்று சேரும். அதாவது, பொருட்கள் விலை அதிகரித்திருக்கும்.

இதுபோன்ற விடயங்களை தன்னுடன் பகிர்ந்துகொண்ட பல்பொருள் அங்காடிகள், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தால், இந்த தடைகள் நீங்கும் என்பதால், மளிகைப்பொருட்கள் மீதான அழுத்தம் குறையும் என தன்னிடம் தெரிவித்ததாக தெரிவிக்கிறார் ஆன்டி பர்னாம்.

அதாவது, ஏற்றுமதி இறக்குமதி தொடர்பிலான எல்லை சோதனைகள், கட்டுப்பாடுகள் நீங்குவதால், அவற்றை கொண்டு சேர்ப்பதற்கான செலவும், நேரமும் குறையும் என்கின்றன பல்பொருள் அங்காடிகள்.

ஆக, பல்பொருள் அங்காடிகளுக்கு செலவு குறைவதால், அவர்கள் மளிகை முதலான பொருட்களின் விலைகளைக் குறைப்பார்கள். அது பிரித்தானிய மக்களுக்கு நல்ல செய்தி என்கிறார் பிரதமர் ஆன்டி பர்னாம்.

விடயம் என்னவென்றால், புதிய ஒப்பந்தம், 2028ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதிதான் அமுலுக்கு வருகிறது!

ஆகவே, பிரதமர் கூறும் நல்ல செய்தியை மக்கள் அனுபவிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கவேண்டும்... 
 

Leave a comment

Comment