TamilsGuide

ஹோர்முஸ் நீரிணை கண்ணிவெடிகளில் சிக்கிய மூன்று கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகப் பயணித்த மூன்று எரிபொருள் போக்குவரத்துக் கப்பல்கள் மூன்று கடற்படை கண்ணிவெடிகளில் (Naval Mines) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது.

பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் இந்த நீரிணை ஊடாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கணிசமான அளவு கொண்டு செல்லப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தை ஈரான் கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது. ஈரானின் அனுமதியின்றி குறிப்பிட்ட கடற்பாதைகள் ஊடாகப் பயணிக்கும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படை எச்சரித்துள்ளது.

கப்பல்கள் தமது ரேடார் மற்றும் அடையாளம் காணும் கருவிகளைச் செயலிழக்கச் செய்து தடைசெய்யப்பட்ட பாதைகளில் பயணித்ததாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கப்பல்களின் பெயர்கள், அவற்றின் உரிமையாளர் நாடுகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ஈரானின் இந்தக் குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுவது சர்வதேச மசகு எண்ணெய் விலை, எரிபொருள் விநியோகம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கும் இது முக்கியமான விடயமாகும்.
 

Leave a comment

Comment