அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கலபாசாஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹொலிவூட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் ஜாடா பிங்கெட் ஸ்மித் ஆகியோருக்குச் சொந்தமான, 42 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொகுசு பங்களா வளாகத்தில் திங்கட்கிழமை (23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளாகத்திலுள்ள பராமரிப்புக் கொட்டகை ஒன்றில் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அருகிலுள்ள புதர்கள் மற்றும் பிரதான கட்டிடங்களுக்குத் தீ பரவுவதற்கு முன்பே அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதுடன், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வளாகத்தில் தீ விபத்து ஏற்படுவது இது முதல் முறையன்று. முன்னதாக 2021 ஆம் ஆண்டிலும் புனரமைப்புப் பணிகளின் போது இங்கு தீ விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


