நீலாம்பரியாக மிரட்டி, சிவகாமி தேவியாக ஆட்சி செய்த தென்னிந்திய சினிமாவின் கம்பீரமான நடிகை!
சினிமா
தமிழ் சினிமாவில் அழகான கதாநாயகியாக அறிமுகமாகி, பின்னாளில் வில்லி, அம்மன், அம்மா, அரசி என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கிற ஒரு நடிகைதான் ரம்யா கிருஷ்ணன்.
1967-ம் ஆண்டு பிறந்தவர் என்று சில இடங்களில் தவறான தகவல்கள் இருந்தாலும், இவருடைய சரியான பிறந்த தேதி 15 செப்டம்பர் 1970. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். நடிகர் சோ ராமசாமியின் உறவினர். சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட நடனக் கலைகளைக் கற்றுக்கொண்டார்.
சினிமாவில் இவருடைய பயணம் ரொம்பச் சிறிய வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. மலையாளத்தில் முதலில் நடித்த நேரம் புலரும்போல் திரைப்படம் தாமதமாக 1986-ல் வெளியானது. ஆனால் 1985-ல் வெளியான வெள்ளை மனசுதான் இவருடைய முதல் வெளியான திரைப்படம். இதில் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதற்குப் பிறகு ரஜினிகாந்தின் படிக்காதவன், கமல்ஹாசனின் பெர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். ஆரம்பத்தில் கதாநாயகியாக பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து நடித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சூத்ரதாருலு, அல்லுடுகாரு, அல்லரி மொகுடு, மேஜர் சந்திரகாந்த், அல்லரி பிரியுடு போன்ற படங்கள் இவருடைய தெலுங்குத் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்தன.
1993-ல் வெளியான இந்திப் படமான கல்நாயக்கிலும் நடித்தார். தொடர்ந்து பரம்பரா, சாஹத், பனாரஸி பாபு, படே மியான் சோட்டே மியான் போன்ற இந்திப் படங்களிலும் நடித்தார்.
1995-ல் வெளியான தெலுங்குத் திரைப்படமான அம்மோரு இவருடைய வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. அம்மன் கதாபாத்திரத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படம் தமிழிலும் அம்மன் என்ற பெயரில் ரசிகர்களிடம் பிரபலமானது.
1997-ல் நாகார்ஜுனாவுடன் நடித்த அன்னமய்யா திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. 1998-ல் வெளியான கண்டே கூத்துர்னே கானு படத்துக்காக நந்தி விருதும் பெற்றார்.
ஆனால் தமிழ் ரசிகர்கள் மனதில் இவருக்கென்று ஒரு நிரந்தரமான இடத்தை உருவாக்கிய படம் 1999-ல் வெளியான ரஜினிகாந்தின் படையப்பா.
அந்தப் படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் ரஜினிக்கு இணையாக இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்களால் பேசப்பட்டது. திமிர், அழகு, ஆணவம், கோபம், பழிவாங்கும் எண்ணம் என நீலாம்பரியின் ஒவ்வொரு உணர்வையும் தன்னுடைய நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார்.
இன்னைக்கும் தமிழ் சினிமாவில் சிறந்த பெண் வில்லி கதாபாத்திரங்களைப் பட்டியலிட்டால் நீலாம்பரிக்கு கண்டிப்பாக முதலிடங்களில் ஒன்று இருக்கும். அந்தக் கதாபாத்திரத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் தமிழக அரசின் சிறப்புப் பரிசும் பெற்றார்.
அதற்குப் பிறகு 2000-ல் ராஜகாளியம்மன், பட்ஜெட் பத்மநாபன் போன்ற படங்களில் நடித்தார். 2002-ல் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் படத்தில் நகைச்சுவை கலந்த நடிப்பைக் கொடுத்தார். 2003-ல் ஜூலி கணபதி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2003-ம் ஆண்டு தெலுங்குத் திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சியைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ரித்விக் வம்சி என்ற மகன் இருக்கிறார். கிருஷ்ண வம்சி இயக்கிய சந்திரலேகா உள்ளிட்ட படங்களிலும் ரம்யா நடித்திருக்கிறார்.
திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்தார். தங்கம், ராஜகுமாரி, வம்சம் போன்ற சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்தார். சின்னத்திரையிலும் தனக்கென ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார்.
2015-ல் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி: தி பிகினிங் திரைப்படம் இவருடைய வாழ்க்கையில் இன்னொரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சிவகாமி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் இவருடைய கம்பீரமான தோற்றம், வசன உச்சரிப்பு, முகபாவனைகள் எல்லாமே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. ஒரு அரசியாகவே திரையில் வாழ்ந்திருந்தார்.
2017-ல் வெளியான பாகுபலி 2: தி கன்க்ளூஷன் படத்திலும் சிவகாமி தேவியாகத் தொடர்ந்து மிரட்டினார். இந்தப் படங்களுக்காகப் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றார். குறிப்பாக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர், நந்தி உள்ளிட்ட விருதுகள் இவருடைய நடிப்புக்குக் கிடைத்தன.
2019-ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதிலும் வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்திருந்தார்.
அதே ஆண்டில் வெளியான குயின் இணையத் தொடரில் சக்தி சேஷாத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தத் தொடர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்திலும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.
2021-ல் ரிபப்ளிக், ரொமான்டிக் படங்களில் நடித்தார். 2022-ல் பங்கார்ராஜு, லைகர் படங்களில் நடித்தார். 2023-ல் கிருஷ்ண வம்சி இயக்கிய ரங்கமார்த்தாண்டா படத்திலும், மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்திலும் நடித்தார்.
ஜெயிலர் படத்தில் விஜயலட்சுமி 'விஜி' பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார். நீலாம்பரி, சிவகாமி தேவி எனப் பெரிய கதாபாத்திரங்களில் பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் இவருடைய இயல்பான குடும்பப் பெண் நடிப்பு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
2024-ல் மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம், தெலுங்கில் புருஷோத்தமுடு, தேவரா போன்ற படங்களில் நடித்தார்.
2025-ல் ஜாட், காட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதே ஆண்டில் வெளியான பாகுபலி: தி எபிக் படத்திலும் சிவகாமி தேவியாக ரசிகர்களை மீண்டும் சந்தித்தார்.
2026-ல் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படத்திலும் விஜி பாண்டியன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்திருக்கிறார். அடுத்தடுத்த திரைப்படங்களிலும் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சமீபத்தில் கணவர் கிருஷ்ண வம்சியுடன் தனித்தனி நகரங்களில் வசிப்பது குறித்துப் பல செய்திகள் வெளியாகின. இதுபற்றி ரம்யா கிருஷ்ணனே விளக்கம் கொடுத்திருக்கிறார். இருவரும் இன்னமும் திருமண வாழ்க்கையில் ஒன்றாகத்தான் இருப்பதாகவும், தொழில் மற்றும் மகனின் படிப்பு காரணமாக வெவ்வேறு நகரங்களில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளில் 260-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர்.
ஒரு காலத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், பின்னர் வில்லியாக மிரட்டினார். அம்மனாக அருள்பாலித்தார். நீலாம்பரியாகப் பழிவாங்கினார். சிவகாமி தேவியாக ஆட்சி செய்தார். குயின் தொடரில் அரசியல் தலைவியாகவும் மாறினார்.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணனைப் பொறுத்தவரைக்கும் அவருடைய நடிப்பில் நமக்கு எப்போதுமே மறக்க முடியாத இரண்டு கதாபாத்திரங்கள் நீலாம்பரியும் சிவகாமி தேவியும்தான். ????






















