'ராமாயணா' படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மூன்று ஆண்டுகள் செலவிட்டதாகத் தெரிவித்தார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள 'ராமாயணா' படத்திற்கு ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ. 1,126 கோடியை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்திற்கு இசையமைத்தமை குறித்து ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "நாங்கள் ராமாயணாவின் இசை, கருப்பொருள் மற்றும் பிற அம்சங்களில் மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தோம்.
சில மெட்டுக்களை இறுதி செய்வதற்கு முன்பு, அவற்றின் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வடிவங்கள் தயாரிக்கப்பட்டன.
அந்த செயல்முறை அற்புதமாக இருந்தது. 'ராமாயணத்தில்' முழுமையாக மூழ்கிவிட வேண்டும் என்பதற்காக, நான் சுமார் 10-12 படங்களைக் கைவிட்டேன்.
பல பெரிய மற்றும் முக்கியமான திரைப்பட இயக்குனர்களின் படங்களையும் நான் கைவிட்டேன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.
தன்னை ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்தும் பணிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அவர், "நான் அதை ரசிக்கிறேன். ஒரு திட்டத்தை நான் உண்மையாக விரும்பி, ரசித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். அது எனது கலைப் புரிதலை மேம்படுத்துவதோடு, எனது முழு குழுவிற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது" என்றார்.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இசை மரபுகளை ஆராய்வதில் தனக்குள்ள ஆர்வம் குறித்தும் ரகுமான் பேசினார்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதற்கே உரிய தனித்துவமான அடையாளம் உள்ளது என்றும், ஒரு இசைக் கலைஞராக, இந்த மாறுபட்ட பாணிகளை ஒன்றிணைப்பதை விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், "நான் பல கலாச்சாரங்களுடன் இணைந்திருக்கிறேன்; நான் பாரம்பரிய இசையில் பணியாற்றும்போதும் அல்லது மற்றவர்களுக்காக பாரம்பரிய மெட்டுக்களை வாசிக்கும்போதும் கூட, நான் நவீன இசையைக் கேட்கிறேன்.
எனவே, எனது சிந்தனையில் நவீனத்துவமும் அடங்கியுள்ளது. நான் இரண்டையும் தனித்தனிப் பிரிவுகளில் வைத்திருக்கிறேன். சில சமயங்களில் நான் குழப்பமடைவது கூடண்டு" என்று கூறினார்.


