தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நடிகர் அர்ஜுன் அளித்த புகாரின் பேரில், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் வீடியோவில் ஐஸ்வர்யா குறித்து முன்வைத்த சில சர்ச்சைக்குரிய கருத்துகள் அர்ஜுன் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, தனது மகள் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், அவதூறுகளையும் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நடிகர் அர்ஜுன் கடந்த நவம்பர் 19-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார்.
இந்தப் புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் நேரில் ஆஜரானார்.
அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி, அவர் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் கருத்துகள் குறித்து விளக்கம் பெற்றுள்ளனர். இனி இதுபோன்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசக்கூடாது எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


