TamilsGuide

உலர்ந்த மிளகாய் விலை 2,500 ரூபாவைத் தாண்டும் அபாயம்

உள்ளூர் சந்தையில் உலர்ந்த மிளகாயின் மொத்த விலை எதிர்வரும் காலங்களில் கிலோ கிராமுக்கு 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உலர்ந்த மிளகாய் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அச்சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

சுங்கக் களஞ்சியசாலைகளில் உலர்ந்த மிளகாய் அடங்கிய சுமார் 120 கொள்கலன்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இறக்குமதியாளர்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, சுங்க வரி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தியுள்ளதுடன், பரிசோதனை நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ளனர். 

எனினும், தரநிலைகள் தொடர்பான பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னர் ஒரு கிலோகிராம் உலர்ந்த மிளகாய் சுமார் 1,050 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை சுமார் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடருமானால், மிளகாயின் விலை மேலும் அதிகரித்து 2,500 ரூபாவையும் தாண்டக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த நெருக்கடி மிளகாய்த் தூள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இத்தகைய பல தொழிற்சாலைகள் உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், வர்த்தகர்களும் கணிசமான நிதி இழப்புகளைச் சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, சுங்கக் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உலர்ந்த மிளகாய் இருப்புகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a comment

Comment