TamilsGuide

புதிய படப்பிடிப்பிற்காக மதுரை வந்த தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா - விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தடைந்த நடிகர்கள் தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு, மதுரை விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனுஷ் மதுரைக்கு வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் அதிகாலை முதலே மதுரை விமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர். தனுஷை காரில் ஏற விடாதபடி சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், அவருக்கு மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவப் படத்தைப் பரிசாக வழங்கித் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தனுஷ், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

'லப்பர் பந்து' புகழ் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் அவரது 56-வது திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது.

சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன், 'உறியடி' விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40 முதல் 50 நாட்கள் வரை இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment