• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்

இலங்கை

எல்லை தாண்டிய இணையவழி நிதி மோசடி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதையும், அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) மற்றும் அமெரிக்க நீதித்துறையின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு வாரகால விசேட விஜயத்தை இன்று (22) நிறைவு செய்துள்ளது.

நவம்பர் 16 முதல் 22 ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது, அமெரிக்க அதிகாரிகள் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸின் பல்வேறு முக்கிய விசாரணைப் பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். இலங்கைசுற்றுலா

இதில், கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIU), மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் தொழில்நுட்ப உதவிப் பிரிவு (TAU) ஆகியவை உள்ளடங்குகின்றன.

இலங்கையில் இயங்கிவரும் மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதும், அவற்றின் ஊடாக அமெரிக்க மற்றும் இலங்கைப் பிரஜைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளை முறியடிப்பதும் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இதன்போது, இரு நாடுகளின் அதிகாரிகளும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய, இலங்கையில் இடம்பெற்றுவரும் இரண்டு முக்கிய மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகளின் புலனாய்வு உத்திகள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட 80க்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களிலிருந்து டிஜிட்டல் ஆதாரங்கள் மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இலங்கைசுற்றுலா

மேலும், டிஜிட்டல் ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்வது தொடர்பான விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், எல்லை தாண்டிய குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், இணையவழிக் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வலுவான வழக்குகளைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அடித்தளத்தை உருவாக்க உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய குற்றவியல் வலையமைப்புகள் உலகளாவிய ரீதியில் பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இத்தகைய குற்றங்களை முறியடிப்பதற்கு சர்வதேச சட்ட அமுலாக்கத் தரப்பினருக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் இரு நாடுகளின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க FBI அதிகாரிகளின் விஜயம் நிறைவடைந்துள்ள போதிலும், மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பது, குற்றவியல் வலையமைப்புகளின் செயற்பாடுகளை முடக்குவது மற்றும் இரு நாடுகளினதும் மக்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply