TamilsGuide

உலகை அச்சுறுத்தும் அமைதியான பெருந்தொற்று குறித்து கனடாவில் ஆய்வு

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை அவற்றை அழிக்கும் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் 'நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன்' குறித்து கனடாவின் ரெஜினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் மத்தியில் இது குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இதை 'அமைதியான பெருந்தொற்று' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நுண்ணுயிரிகள் மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போகும்போது 'சூப்பர்பக்ஸ்' எனப்படும் வீரியமிக்க கிருமிகளாக உருவெடுக்கின்றன.

மருந்துகளின் தாக்கத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள அவை உருவாக்கும் பாதுகாப்புக் கவசம், மருத்துவச் சிகிச்சைகளைப் பயனற்றதாக்கி விடுகிறது என உயிர்வேதியியல் இணைப் பேராசிரியர் கலாநிதி ஒமர் எல்-ஹல்ஃபாவி விளக்கியுள்ளார்.

தற்போதைய நிலையே தொடர்ந்தால், இது எதிர்காலத்தில் மிகப் பெரிய பெருந்தொற்றாக மாறக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு நிகழும் பட்சத்தில், கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனால் ஏற்படும் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடிய அகாடமிகள் சபையின் ஆய்வு அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் கனடாவில் 14,000 பேர் இந்தப் பிரச்சினையால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலைமை மாறாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் கனடாவில் 5 இலட்சம் பேரும், உலகளவில் 1 கோடிக்கும் அதிகமானோரும் உயிரிழக்க நேரிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் சிகிச்சை பலன்களை மேம்படுத்தப் புதிய வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வில் பல்கலைக்கழக ஆய்வகங்கள் ஈடுபட்டுள்ளன.

பாக்டீரியாக்கள் தொடர்ந்து உருமாறி வந்தாலும், புதிய மருத்துவத் தீர்வுகளுக்கான ஆய்வுகளும் தொடர்வதாகக் கலாநிதி பட்டப்படிப்பு மாணவர் ஜோஷுவா ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், தவறான முறையிலும் பயன்படுத்துவதே இந்த அபாயம் வேகமாகப் பரவக் காரணமாக உள்ளது.

எனவே, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

நோய்வாய்ப்படாமல் தற்காத்துக் கொள்வதே நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் தேவையைக் குறைப்பதற்கான சிறந்த வழி என்றும், இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment