Justice Vikas Khaladkar cites new law in denying bail for repeat offender: கனடாவில் வழக்கொன்றில் தீர்ப்பளித்த நீதிபதி ஒருவர், புதிய சட்டம் ஒன்றை மேற்கோள் காட்டி குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த கனேடியர் ஒருவர், தன் முன்னாள் காதலியை கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் Newfoundlandஇல் வாழும் ஸாக்கரி டன்பி (Zachary Dunphy) என்பவர், உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்த தன் முன்னாள் காதலியை, முடியைப் பிடித்து தரதரவென இழுத்துவந்ததுடன், கத்தியைக் காட்டியும் மிரட்டியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் காரில் தப்பியோடிய டன்பியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தன் காதலியின் சகோதரிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் டன்பி.
அந்தச் செய்தியில், இது கனடா, எனக்கு சீக்கிரமாக ஜாமீன் கிடைத்துவிடும், இன்று மாலையே அவள் என்னுடன் இருப்பாள் என்று குறிப்பிட்டுள்ளார் டன்பி.
டன்பி, ஜாமீன் கோரி Newfoundland and Labrador உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில், டன்பி கூறியதை மேற்கோள் காட்டியே அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளார் நீதிபதி.
அதாவது, இது கனடா, எனக்கு சீக்கிரமாக ஜாமீன் கிடைத்துவிடும் என்று டன்பி கூறியதை சுட்டிக் காட்டிய நீதிபதி விகாஸ் கலத்கர் (Justice Vikas Khaladkar), இனி அது நடக்காது என்று கூறியுள்ளார்.
அதாவது, கனடாவில், The federal Bail and Sentencing Reform Act என்னும் புதிய சட்டம் ஜூலை மாதம் அமுலுக்கு வந்துள்ளது.
அதன்படி, டன்பியின் சட்டத்தரணிகள் அவருக்கு எதனால் ஜாமீன் கொடுக்கலாம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவேண்டும்.
ஆனால், டன்பியைப் பொருத்தவரை, கடந்த 8 ஆண்டுகளில் 11 முறை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், 11 முறையும் ஜாமீன் கட்டுப்பாடுகளை மீறியுள்ளார்.
ஆக, டன்பி கடந்த காலத்தில் செய்ததையே மீண்டும் செய்வார், அதாவது, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவார் என்பது உறுதி என்று கூறியுள்ள நீதிபதி விகாஸ் கலத்கர், மேலும், டன்பி கனடாவின் நீதித்துறையையும் அவர் விமர்சித்ததையும் சுட்டிக் காட்டி, டன்பிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.


