TamilsGuide

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த வல்லரசுத் தலைவர்களின் சந்திப்பு

உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் சர்வதேச கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை இதுவரை எட்டு முறை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, ஷி ஜின்பிங்குடன் தனக்கு மிகச் சிறந்த நட்புறவு இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த மே மாதம் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டபோதும், ட்ரம்ப் அவரை நேரில் வரவேற்று சந்தித்திருந்தார். இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ட்ரம்ப் இதுவரை ஏழு உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்தியுள்ளார். அவற்றில் ஒன்று மட்டுமே ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, 2025 ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் நடைபெற்ற ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றிருந்தாலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

மறுபுறம், ஏபெக் (APEC) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஷி ஜின்பிங்கும் விளாடிமிர் புட்டினும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான முந்தைய சந்திப்பு கடந்த மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. அப்போது, அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், கலாசாரப் பரிமாற்றங்களையும் மக்களுக்கிடையிலான தொடர்புகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக புட்டின் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் உலக வல்லரசுகளுக்கு இடையிலான இத்தகைய தொடர் சந்திப்புகள், சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரச் சமநிலையில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.
 

Leave a comment

Comment