அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஒன்ராறியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெறுமாறு அமெரிக்க இந்திய தேசிய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள அமெரிக்க இந்திய மற்றும் அலாஸ்கா நேட்டிவ் பழங்குடி அரசாங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நிறுவனம், டிரம்பின் இந்த நடவடிக்கை பழங்குடியினரின் புவியியல் பெயர்களையும், நிலம் மற்றும் நீருடன் அவர்களுக்குள்ள கலாச்சார, ஆன்மீக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளையும் அவமதிப்பதாகக் கூறியுள்ளது.
மேற்கு நியூயார்க்கைச் சேர்ந்த செனெகா நேஷன் ஆஃப் இன்டியன்ஸ் சமூகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற அமைப்பின் கூட்டத்தில் பெயர் மாற்றத்தை நிராகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'ஒன்ராறியோ' என்ற பெயர் செனெகா மொழியில் "sga:nyodai:yoh" (அழகான ஏரி) என்றும், வெண்டாட் மொழியில் "ontari:io" (ஏரி அழகாகவும் பெரியதாகவும் இருக்கிறது) என்றும் அழைக்கப்படுகிறது.
எல்லைகளுக்கு அப்பால் வாழும் ஹோடெனொசனி சமூகத்தினரின் பழங்குடி மொழி மூலங்களிலிருந்து பெறப்பட்ட இந்தப் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா உருவாவதற்கு முந்தைய காலந்தொட்டே புழக்கத்தில் உள்ளது.
வெண்டாட் நேஷனின் கிராண்ட் சீஃப் பியர் பிகார்ட், டிரம்பின் பெயர் மாற்றியமைக்கும் நடவடிக்கை தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், அப்பகுதியில் தங்கள் வரலாற்றை அழித்தொழிக்கும் முயற்சி இதுவென்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் ஆளுநர் டோனி எவர்ஸ், பாஸ்ட் உணவு நாப்கினில் கையெழுத்திட்டு மிச்சிகன் ஏரியை 'விஸ்கான்சின் ஏரி' என மாற்றுவதாக கிண்டலாக வீடியோ வெளியிட்டார்.
அதேபோல், கனடா பிரதமர் மார்க் கார்னி, அந்த ஏரி "அன்றும், இன்றும், எப்போதும் ஒன்ராறியோ ஏரிதான்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


