TamilsGuide

கனடாவில் பள்ளிகளில் கைப்பேசித் தடை - ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றம்

கனடாவின் கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள முழுமையான கைப்பேசித் தடை, மாணவர்களின் கல்விச் செயல்திறன் மற்றும் நடத்தையில் பாரிய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்விலும், பள்ளிகளில் கைப்பேசிப் பயன்பாட்டைத் தடை செய்வது கற்றல் இழப்புகளில் பாதியை மீட்டெடுக்க உதவுவதுடன், மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒன்று முதல் இரண்டு வாரங்கள் கூடுதல் கற்றலுக்கு இணையான பலனைத் தருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணப் பள்ளிகளில் கைப்பேசித் தடை அமுல்படுத்தப்பட்டு இரண்டாவது கல்வி ஆண்டு நடைபெற்று வரும் நிலையில், வகுப்பறைகளில் மாணவர்களின் கவனச்சிதறல் பெருமளவு குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து மொண்ட்ரியால் நகரின் ரோயல் வெஸ்ட் அகாடமி ஆசிரியர் ஆடம் வில்ட்ஸர் கூறுகையில், மதிய உணவு மற்றும் இடைவேளை நேரங்களிலும் கைப்பேசித் தடை அமுலில் இருப்பதால், முன்னர் அமைதியாக போன்களைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் தற்போது சிற்றுண்டிச்சாலைகளில் ஒருவருக்கொருவர் உரையாடத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தத் தடையானது வகுப்பறைக் குழுச் செயற்பாடுகளில் மாணவர்கள் தயக்கமின்றி இணைந்து பணியாற்ற உதவுவதுடன், அவர்களின் கைப்பேசி அடிமைத்தனத்தைக் குறைக்கவும் பெரும் பங்காற்றி வருவதாகக் கல்வியியலாளர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 
 

Leave a comment

Comment