கனடாவின் முக்கிய துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், பல்வேறு துறைகளில் நிபுணர்களை நாட்டுக்கு வரவேற்க கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (Immigration, Refugees and Citizenship Canada)அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) குடியேற்றத் திட்டத்தின் ஊடாகத் தகுதியான நிபுணர்களைத் தெரிவு செய்யவுள்ளதாகக் IRCC குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைத்துறை, தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட தொழிலாளர்கள்,கல்வித்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துறை, விஞ்ஞானம், போக்குவரத்துத் துறை போன்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
மேலும், கனடாவில் பணி அனுபவம் கொண்ட மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயர் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றவர்களும் முன்னுரிமைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் தற்போதைய தொழிலாளர் படையணிக்கு வலுச்சேர்ப்பதுடன், முக்கிய பொருளாதாரத் துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைப் போக்குவதுமே இத்திட்டத்தின் நோக்கம் என IRCC தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்பது கனடாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற விரும்பும் திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான குடியேற்ற விண்ணப்ப முகாமைத்துவ முறைமையாகும்.
குறிப்பிட்ட கல்வித் தகைமைகள், தொழில் அனுபவம் மற்றும் மொழித் திறன்களைக் கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பைப் பெற முடியும்.


