கனடாவில் நிரந்தர வதிவிடஅனுமதிக்காக நீண்டகாலமாகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கானோருக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் வகையில், 2027 ஆம் ஆண்டில் 200,000 மேலதிக நிரந்தர வதிவிட வாய்ப்புகளை வழங்குவதற்கான விசேட திட்டத்தை கனடா மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கனடாவில் வசித்து, தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்பியுள்ளவர்களின் விண்ணப்பங்களைத் துரிதப்படுத்தி அவர்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
அரசாங்கத்தின் வழக்கமான 380,000 வருடாந்தக் குடியேற்ற இலக்கிற்கு மேலதிகமாக, விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த 200,000 இடங்கள் இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
கியூபெக் மாகாணத்திற்கு வெளியே உள்ள சமூகங்களில் ஏற்கனவே பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு 100,000 நிரந்தர வதிவிட வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களின் தேவைகளுக்கு ஏற்ப இத்தொழிலாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இப்பிரிவின் கீழான விண்ணப்பங்களை முழுமையாகப் பரிசீலித்து முடிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
ஹொங்கொங் குடியேற்றப் பாதை ஊடாக 32,000 பேருக்கும், உக்ரைன் குடியேற்றப் பாதை ஊடாக 18,800 பேருக்கும், கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமையாளர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிள்ளைகள் 45,000 பேருக்கும், மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில் தகுதி பெற்ற 12,600 பேருக்கும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கவுள்ளது.
ஹொங்கொங் மற்றும் உக்ரைன் மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றவும், குடும்பங்களை ஒன்றிணைக்கவும், ஏற்கனவே கனடாவில் வாழும் மக்களின் நிச்சயமற்ற தன்மையைப் போக்கவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என குடியேற்றத்துறை அமைச்சர் லீனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.


