TamilsGuide

கனடாவில் அரசியல் பிரசாரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் போலி காணொளிகள்

கனடாவில் தேர்தல்கள் மற்றும் முக்கிய அரசியல் விவகாரங்களில் மக்களின் மனநிலையைத் திசைதிருப்புவதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி 'டீப்ஃபேக்' காணொளிகள் பாரிய அளவில் பரப்பப்பட்டு வருவதாக மெக்கில் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கனடாவில் அரசியல் ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துக்களைப் பரப்புவதற்காகச் செயற்படும் குறைந்தது 293 டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் கொண்ட ஒரு பாரிய வலையமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயகத்திற்கான மையம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 

வெறும் மூன்று மாத காலப்பகுதியில், இந்தப் போலி வலையமைப்பின் ஊடாக வெளியிடப்பட்ட சுமார் 3,000 காணொளிகள் 20 மில்லியனுக்கும் அதிகமான தடவைகள் பார்க்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அல்பர்ட்டா மாகாணத்தின் சர்வஜன வாக்கெடுப்பு, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் மாகாணத் தேர்தல்கள் மற்றும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இத்தகைய போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வலையமைப்பின் பின்னணியில் உள்ளவர்களைத் துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை எனினும், இவை வட அமெரிக்காவிற்கு வெளியில், குறிப்பாக கிழக்கு அல்லது தெற்காசியாவிலிருந்து இயக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உண்மையான சமூக வலைத்தளப் பிரபலங்களின் முகங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல்களை இணைத்து, அவர்கள் கூறாத அரசியல் கருத்துக்களைக் கூறுவது போல் இக்காணொளிகள் தயாரிக்கப்படுகின்றன.

கனடிய அரசியல் விவகாரங்கள் குறித்துப் பதிவிட்டு வரும் இளம் சமூக வலைத்தளப் பிரபலம் கோல் பென்னட் இதற்குப் பலியானவர்களில் ஒருவர். அல்பர்ட்டா சர்வஜன வாக்கெடுப்பு குறித்துத் தான் பதிவிட்டுக் கொண்டிருந்தபோது, தனது முகத்தைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவுக் குரல் மூலம் தான் சொல்லாத விடயங்களைச் சொன்னது போல் பல போலி காணொளிகள் பரப்பப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தேர்தல்கள் குறித்து இணையத்தில் தேடும் போது, சமூக வலைத்தள அல்காரிதம்கள் இத்தகைய போலி காணொளிகளையே முன்னிலைப்படுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Leave a comment

Comment