TamilsGuide

இந்தியாவில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க இலங்கை நிறுவனத்திற்கு 75 மில்லியன் டொலர் ஒப்பந்தம்

இலங்கையின் முன்னணி மின்சக்தி பொறியியல் நிறுவனமான லக்தனவி லிமிடெட் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 57 மெகாவோட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் மின்சார உற்பத்தி நிலைய நிர்மாணத் துறையில் (EPC) லக்தனவி நிறுவனம் முதன்முறையாகக் கால்பதிக்கிறது.

போர்ட் பிளேயரின் Hope Town பகுதியில் இந்த மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தீவுகளின் மின்சாரக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவதுடன், நீண்டகால எரிசக்தி பாதுகாப்புக்கும் பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசுக்குச் சொந்தமான NTPC நிறுவனத்தின் துணை நிறுவனமான NVVN நடத்திய சர்வதேச போட்டி விலைமனுக் கோரலில், மிகக் குறைந்த விலையை முன்வைத்த நிறுவனமாக (L1) லக்தனவி தெரிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி புதுடில்லி நொய்டாவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. திட்டத்திற்கான மின்சார உற்பத்தி உபகரணங்களை பின்லாந்தைச் சேர்ந்த Wärtsilä நிறுவனம் வழங்கவுள்ளது.

இலங்கையில் பல தசாப்தகால மின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு அனுபவத்தைக் கொண்ட லக்தனவி நிறுவனம், ஏற்கனவே பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட நாடுகளில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இலங்கை நிறுவனங்களின் பொறியியல் திறமை சர்வதேச சந்தைகளிலும் அங்கீகாரம் பெறுவதையும், இலங்கை – இந்திய பொருளாதார ஒத்துழைப்பு இரு திசைகளிலும் விரிவடைவதையும் எடுத்துக்காட்டுகிறது.
 

Leave a comment

Comment