Iran Drone Attack Claim Triggers Bahrain Alert: மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவசர எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
அந்நாட்டு உள்துறை அமைச்சகம் மக்கள் அனைவரும் அமைதியாக இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியது. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை இலக்காகக் கொண்டு ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
பஹ்ரைனின் அல்-ரிஃபா (Al-Riffa) ஹெலிகாப்டர் தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு ரேடார் அமைப்பின் மீது 6 ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் முக்கிய ஐந்தாவது கடற்படைத் தலைமையகம் (U.S. Fifth Fleet) பஹ்ரைனில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க முன்எச்சரிக்கை ரேடார் அமைப்பை தாக்கியதாக ஈரான் கூறியிருந்தது.
ஆனால் அந்த குற்றச்சாட்டை அமெரிக்க இராணுவம் மறுத்து, ஈரானில் இருந்து வந்த 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பின்னர் தொடங்கிய மோதல் கடந்த சில மாதங்களாக தொடர்கிறது. இதன் தாக்கமாக ஹார்முஸ் நீரிணை வழித்தடம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பஹ்ரைனில் சைரன்கள் ஒலித்த இந்த சம்பவம், வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு கவலைகளை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.


