TamilsGuide

பல உண்மைகளை அம்பலப்படுத்திய பிரித்தானியா வாழ் இலங்கையரின் கண்டி வீட்டிற்கு தீ வைப்பு

பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்த, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் பிரபல்யமான சமூக வலைத்தள செயற்பாட்டாளருமான அஜித் தர்மபாலவுக்கு சொந்தமான கண்டியில் அமைந்துள்ள வீட்டின் மீது சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக அவர் பிரித்தானியாவில் குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் நவம்பர் 9ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இந்த தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் முன்பக்க வரவேற்பறை ஜன்னல் ஊடாக பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டினுள் இருந்த பொருட்கள் மற்றும் பல ஜன்னல் கதவுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவும் வேளையில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என ஆரம்பத்தில் தகவல் வெளியான. எனினும், குறித்த வீடு மற்றுமொரு தரப்பினருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், சம்பவம் இடம்பெறும் போது அங்கு நான்கைந்து பேர் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அயலவர்கள் உறங்கிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர். இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் இந்த வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரித்துள்ளார்.

அத்துடன், வீடு யாருக்குச் சொந்தமானது என அவர் விசேடமாக விசாரித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் இந்த தீ வைப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளரான அஜித் தர்மபால என்பவர் பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரியாகும். அவர் சமூக ஊடாகங்கள் ஊடாக தீவிரமான தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார்.

பொலிஸில் உள்நாட்டு அரசியல் தலையீடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் அவர் விமர்சன ரீதியான நீண்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துக் கருத்துத் தெரிவித்த அவர், முன்னாள் அரச நிறுவனங்களையும் ஆட்சியாளர்களையும் கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment