TamilsGuide

நாட்டை இரத்த ஆறாக மாற்றி ஆட்சியைக் கைவிடப் போகும் அநுர! கஸ்ஸப தேரரின் எதிர்வுகூறல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இறுதியில் நாட்டை இரத்த ஆறாக மாற்றி ஆட்சியைக் கைவிடுவார் என்ற அச்சம் எமக்கு உள்ளது என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறான நிலைமைக்கு நாட்டைக் கொண்டுச் செல்ல நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த தேரர் குழுவினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் புனித பூமியைப் பாதுகாப்பதற்காகவே, நாம் இன்று சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

வெளிநாடுகளில் உள்ள மேலதிக முதலீடுகள் இலங்கைக்குள் வருவதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் எமது நாட்டுக்குள் வர வேண்டும். அந்த முதலீடுகளின் மூலம் இந்தப் புனித நகரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் ஆனால் அந்த அபிவிருத்தி ஒழுக்கமற்ற மற்றும் கட்டுப்பாடற்ற முறையில் இடம்பெறக் கூடாது.

எமது பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பௌத்த வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாத்து, அவற்றின் பழமையான பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டி, ஆன்மீக தேரவாத சுற்றுலா மையமாக இந்தப் புனித பூமி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு அல்லாமல், மதுபானம் அருந்தும் இடங்கள், நடன நிகழ்வுகள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றை அமைப்பதற்காக இந்தப் புனித பூமியைப் பயன்படுத்தக் கூடாது.

இலங்கையில் அரசர் ஒருவரால் அமைக்கப்பட்ட முதலாவது குளத்தின் அருகில், ஹோட்டல்கள் போன்றவற்றை அமைப்பது புனித பூமியின் நோக்கத்திற்கு முரணானது.

இந்தப் புனித பூமியை சிறிய சிறிய நிலப்பகுதிகளாகப் பிரித்து, தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்குவதற்கும், சில நேரங்களில் பிற மதத்தினருக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படலாம். அதன் பின்னர், இந்தப் புனித பூமி சர்வமத மயமாக்கப்படும் அபாயமும் உள்ளது.

எனவே வெளிநாட்டு முதலீடுகள் இங்கு வர வேண்டும் என்பதில் எமக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், அந்த முதலீடுகள் சங்கத்தினரின் மேற்பார்வையில், வெளிப்படைத்தன்மையுடன், எமது பழமையான நாகரிகத்தைப் பாதுகாத்து, ஆன்மீக மையமாக இந்தப் புனித பூமியை அபிவிருத்தி செய்தவற்காக பயன்படுத்த வேண்டும்.

அதற்காக, புனித பூமி அபிவிருத்திக் குழுவில் எமக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். நாம் எமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்து, மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.

பிக்குகளின் உரிய பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால், இந்தப் புனித பூமி முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் அபாயமும் இருப்பதை நாம் புரிந்து கொள்கின்றோம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2028ஆம் ஆண்டில் நாட்டின் கடன்களை செலுத்த முடியாத நிலையை எதிர்கொள்ளவுள்ளார். கடன்களை செலுத்த முடியாத காரணத்தினால் எமது தாய்நாட்டை அடகு வைத்து, வெளிநாட்டு கடன்களின் மூலம் நாட்டை இந்தியாவிடம் ஒப்படைத்து, இந்தியாவிற்கு அடிபணிந்த வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை உருவாக்கி, இறுதியில் நாட்டை இரத்த ஆறாக மாற்றி ஆட்சியைக் கைவிடுவார் என்ற அச்சம் எமக்கு உள்ளது.

இவ்வாறான நிலைமைக்கு நாட்டைக் கொண்டுச் செல்ல நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த நாட்டின் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பின் மூலம் விசேட பொறுப்பும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ள குடிமக்களாக நாம் செயற்படுகின்றோம். அந்த அடிப்படையிலேயே இந்த புனித பூமிக்கு வந்து எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment